144 Anniversary of St.Margaret's Church, Kotagala
St.Margaret's Church, Kotagala
144ம் ஆண்டிலே கடவுளின் துணையோடு, திருச்சபை குடும்பமாக ஓர் சிறப்புமிக்க வருடத்தில் கால் பதித்து இருக்கிறோம். பரி. மாக்ரெட் ஆலயம் 144 வருடங்களாக இப்பிரதேசத்தில் ஒளி வீசும், பிரகாசமான ஆலயமாக திகழ்ந்து வருகிறது.
1876ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1880ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. 1873காலப்பகுதிகளில் இப்பிரதேசத்தில் கடவுளின் திருப்பணி ஆரம்பமானது, இக்காலங்களில் கோப்பி வைப்பகங்களிலும், வெள்ளைக்கார தலைவர் வீடுகளிலும் ஆராதனை நடைபெற்றது. ஆனாலும் இப்பிரதேசங்களில் ஆலயங்கள் கட்டப்படவேண்டும் என்ற சிந்தனை மிகத்தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு, அயராத உழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1875-1889 வரையானகாலங்களில் 5 ஆலயங்கள் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது.1876 - பரி.யோவான் ஆலயம் லிந்துலை, 1876 - சகல பரிசுத்தவான்களின் ஆலயம் மஸ்கெலியா, 1878 - கிறிஸ்து நாதர் ஆலயம், வார்லீ, 1880 -பரி, மாக்ரெட் ஆலயம், கொட்டகலை 1889 - கிறிஸ்து நாதர் ஆலயம்,டிக்கோயா
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள தோட்ட தலைவர்கள்,பணியாளர்கள், கோப்பி பயிச்செய்கைக்காகவும் ஊழியத்திற்காகவும் நம் நாட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் தமது, கலாச்சாரத்தையும், குடும்பங்களையும் அவர்களின் சமூக வாழ்வையும் அதிகமாக இழந்தார்கள். அக்காலகட்டத்தில் தம் நாட்டில் உள்ள கட்டிட கலைக்கு அமைவாக ஆலயங்கள்,சொகுசு வீடுகள் கட்டவேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டு .இங்கிலாந்தில் இருந்து கட்டிடகலை நிபுணர்களை வரவழைத்து, தம் நாட்டின் பாணியில் இங்கு ஆலயங்களை நிர்மாணித்தார்கள். இவ்வாரே பரி. மார்கிரெட் ஆலயமும்,கட்டப்பட்டது.
மாக்ரெட் என்ற அரசியின் இரக்கச்செயல்களை நினைவுகூரும் விதமாக இவ்வாலயத்திற்கு பரிசுத்த மாக்ரெட் ஆலயம் என பெயரிடப்பட்டது. இவ் அரசி மன்றாடலிலும்,தூய்மையான வாழ்விழும், இரக்கச்செயல்கள் புரிவதிலும், விசுவாசத்தில் மற்றவர்களை வளர்ப்பதிலும் பாடுபட்டவராவார். தனது நாட்டு மக்களை நேசித்து, வழிகாட்டி வாழ்ந்தவராவார். 1250ம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.இவர் ஸ்காட்லாந்தின் முத்து என அழைக்கப்பட்டார். (’Pearl of Scotland’.)
பரிசுத்த மாக்ரெட் அவர்களின் வாழ்வின் குணாதிசயங்களை நினைவுகூர இவ் ஆலயம் கட்டப்பட்டது. இன்றும் எமது ஆலயம் சமுகப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் வழிநடத்தும் ஓர் ஆலயமாக காணப்படுகிறது. சாந்தி சர்வமத பாலர் பாடசாலை 24 வருடங்களாக எமது பிள்ளைகளின் வாழ்வை , மிகவும் நேர்த்தியாக வனையும் ஓர் இடமாக காணப்படுகிறது. விளையாட்டின் ஊடாக நல்ல பண்புகளையும்,வாழ்விற்கான நற்காரியங்களையும் எமது சமூக பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.தாய்மார்களுக்குக்கான தையல்,கைவேலை வகுப்புகளும், Slow learners பிள்ளைகளுக்கான வகுப்புகளும் நடைபெறுகிறது.
தலைமுறை தலைமுறை தோறும் வழிநடத்திய ஆண்டவர்,இன்னும் அவரின் பணியை சிறப்பாக இப்பிரதேசத்தில் செய்ய எமக்கு அருள் புரிவராக.
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். சங்கீதம் 100:5


Comments
Post a Comment